சங்கல்பம்………………..
கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்
ஆசிரியர் கலைமகள்…………..
சங்கல்பம் என்று நாம் சாதாரணமாக சொல்லும் சொல்லுக்கு என்ன அர்த்தம்? சங்கல்பம் என்கிற சமஸ்கிருத சொல்லுக்கு இன்ன நாளில், இந்த இடத்தில், இன்ன நோக்கத்திற்காக, இந்த பூஜையைச் செய்யப் போகிறேன் என்று அறிவிப்பதாகும். இப்படி பகிரங்கமாக உறுதி மொழி எடுப்பதால் அதிலேயே மனம்,உடல் லயித்திருக்கும்…………
ஹிந்து சம்பிரதாயபடி சங்கல்பத்தில் காலத்தைக் குறிப்பிடும்போது, இந்த மன்வந்தரத்தில், இந்த யுகத்தில் ,இந்த ஆண்டில், இந்த ருது, மாதம், நட்சத்திரம், திதியில் இதைச் செய்கிறேன் என்பதைச் சொல்வார்கள். (இதற்குத்தான் சரியான பஞ்சாங்கம் தேவைப்படுகிறது!!) ஆச்சாரியார் அல்லது நம்முடைய குரு சொல்லச் சொல்ல நாம் அந்த உறுதிமொழி மந்திரத்தை திரும்பச் சொல்ல வேண்டும்…………
சங்கல்பம் என்பது தனக்குத் தேவையான ஒன்றை இறைவனிடம் கேட்டுப் பெறுகின்ற வகையில் தாக்கல் செய்யப்படுகின்ற மனு என்று பொருள் கொள்ளலாம்……… குறிக்கோளைத் தெரிவித்தல், உறுதிமொழி எடுத்தல் ஆகிய இரண்டுமே சங்கல்பம் செய்வதன் பொருளாகவும் கொள்ளலாம்!……..
தமிழ் இலக்கியத்தில் சங்கல்பம் இருந்ததா? எனக்கு நானே கேட்டுக் கொண்டேன். இதற்கு கம்பர் விடை சொன்னார்.
கவிச்சக்கரவர்த்தி கம்பர் தான் இயற்றிய ராமாயணத்தை ஸ்ரீரங்கத்தில் அரங்கநாதர் சந்நிதியில் அரங்கேற்ற ஆசை கொண்டார்.ஆனால் அதற்குப் பல தடங்கல்கள் எழுந்தன.
தடை பல தாண்டி, அவர் ஸ்ரீரங்கம் சென்று வைணவ சமய ஆசார்யராக அப்போது வீற்றிருந்த ஸ்ரீமந் நாதமுனிகளிடம் அனுமதி கேட்டார். அவர் அனுமதியளித்த பின்னே, ஆலயத்தினுள் ஒரு மண்டபம் எழுப்பி நல்லதோர் நாளில் தம் இராமாயணத்தை அரங்கேற்ற முனைந்தார் கம்பர்.
ஆனால் அப்போதும் ஏதோ தடங்கல். கம்பர் அரங்கநாதனை மனமுருகப் பிரார்த்தித்தார். ஸ்ரீரங்கநாதப் பெருமாள் கம்பரின் கனவிலே‘ எம்மைப் பாடினாய் அன்றி நம் சடகோபனைப் பாடினாயோ? அவனையும் பாடினால்தான் உன் இராமாயணத்தை நாம் ஏற்போம்!’ என்று கூறினார்.
அதனால் கம்பர் நம்மாழ்வாரான சடகோபர் மீது நூறு பாக்களால் சடகோபர் அந்தாதியை இயற்றினார். அதன் பிறகே அவருடைய ராமாயணம், நாதமுனிகளின் முன்னிலையில், அரங்கநாதப் பெருமான் ஆலயத்தில் தாயார் சந்நிதி முன்னுள்ள மண்டபத்தில் அரங்கேறியது என்று சொல்வார்கள்.
(நானும் கலைமகள் பதிப்பாளர் திரு ராஜன் அவர்களும் மற்றும் என்னுடைய நண்பர் இந்திர நீலன் சுரேஷ் அவர்களுடன் ஸ்ரீரங்கம் சென்றபோது எடுத்த புகைப்படத்தை கீழே காணலாம்……)
அப்போது, தாயார் சந்நிதி முன் இருந்த மேட்டு அழகிய சிங்கப் பிரான் சப்தம் எழுப்பிச் சிரித்ததாகவும் ஒரு செய்தி உண்டு. இந்த மண்டபம், இன்றும் கம்பர் ராமாயணம் அரங்கேற்றிய மண்டபம் என்று அரங்கநாயகித் தாயார் சந்நிதி முன்னால் உள்ளது.
கம்பர் தம் சடகோபர் அந்தாதியில் ‘நம்மாழ்வாரே எனக்குக் காப்பு’ என்று சொல்லி ஒரு காப்புச் செய்யுள் படைத்து அந்தாதியைத் தொடங்கினார். அந்த துதிப்பாடல்…
தருகை நீண்ட தயரதன் தான் தரும்
இருகை வேழத்தி ராகவன் தன் கதை
திருகை வேலைத் தரைமிசைச் செப்பிடக்
குருகை நாதன் குரைகழல் காப்பதே.
-இந்தக் காப்புச் செய்யுளார் நம்மாழ்வாரின் பெருமையைப் போற்றிக் கொண்டாடுகிறார் கம்பர். அது சரி காப்பு செய்யுள் என்றால் என்ன? அதுதான் சங்கல்பம்……….
காப்புச் செய்யுள் என்பது தமிழ் இலக்கியங்கள் பலவற்றில் முதலாவதாக அமையும் பாடல். கவிஞர் தான் படைக்க நினைத்துள்ள நூலினை வெற்றிகரமாக முழுமையாக இயற்றி முடிப்பதற்கு இறைவன் துணை நின்று காக்க வேண்டும் என்ற கருத்தில் உறுதி கொண்டு சங்கல்பம் செய்து இதைப் பாடுவார். எனவே இது காப்புச் செய்யுள் எனப்படுகிறது.
கல்வெட்டு ஒன்றும் சங்கல்பம் பற்றி பேசுகிறது………….
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது பெரும்பேர் கண்டிகை என்ற ஊர். இங்கு தடுத்தாட்கொண்ட நாயகி உடன் உறை தான் தோன்றீஸ்வரர் ஆலயம் இருக்கிறது. மணல் லிங்கமாக சுயம்புவாக தோன்றி அகத்திய முனிவருக்கு காட்சி கொடுத்ததால் தான்தோன்றீஸ்வரர் என்று பக்தர்களால் வணங்கப்படுகிறார்.
இக்கோவிலில் உள்ள கல்வெட்டில் கோவிலில் பூஜை செய்யும் சிவாச்சாரியாரின் மூதாதையர்கள் சூரியன் சந்திரன் இருக்கும் வரை சுவாமிக்கு பூஜை செய்வதாக சங்கல்பம் செய்துள்ளதாக 834 ஆண்டுகளுக்கு முன் ஏற்படுத்தப்பட்ட கல்வெட்டு தெரிவிக்கிறது..