ஸ்ரீ ஆவுடை அக்காள்

ஸ்ரீ ஆவுடை அக்காள்
– கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் –

ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த செங்கோட்டையில் (தற்போதைய தென்காசி மாவட்டம்) பிறந்தவர் ஸ்ரீ ஆவுடை அக்காள். இவருடைய பாடல்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தம். ஆவுடை அக்காள் பற்றிய சில விஷயங்களை கீழே பகிர்ந்துள்ளேன்.

என்னுடைய இனிய நண்பர்களில் ஒருவர் அமரர் கொல்கத்தா மு. ஸ்ரீனிவாசன். இவர் கலைமகளில் ஆவுடையக்காள் பற்றி ஒரு கட்டுரை எழுதினார். இவர்தான் என்னை தபோவனம் சுவாமிகள் நித்தியானந்த கிரி அவர்களிடம் அறிமுகப்படுத்தினார்.

சென்னை தி. நகரில் உள்ள திரு கிருஷ்ணமூர்த்தி என்கிற அன்பரின் வீட்டில் நித்யானந்த கிரி சுவாமிகளைச் சந்தித்தேன். ஆவுடையக்காள் பற்றி ஒரு நூல் தயார் செய்து கொண்டிருப்பதாகவும் அதற்கு உதவ வேண்டும் என்றும் என்னிடம் கேட்டுக்கொண்டார்.

அந்தக் காலத்தில் ஸ்ரீ சிருங்கேரி மடத்திலிருந்து வெளியான ஸ்ரீ சங்கர கிருபா மாத இதழிலும், ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் இருந்து வெளியாகிக் கொண்டிருக்கும் ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் மாத இதழிலும் ஆவுடையக்காள் பற்றி கட்டுரைகள் வந்திருப்பதாகவும் அவைகளைப் பெற்றுத் தரும்படியும் கேட்டுக்கொண்டார்.

என்னிடத்தில் இருந்த பழைய சங்கர கிருபாவை அவர்களிடம் கொடுத்து அவருக்கு உதவினேன். அதேபோன்று ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் சுவாமிஜி விமூர்த்தானந்த மகராஜ் மூலமாக ராமகிருஷ்ண விஜயத்தில் வெளியான கட்டுரைகளையும் தேடிப்பிடித்து எடுத்துக் கொடுத்தேன். சுவாமிஜி மிகவும் சந்தோஷப்பட்டார்.

ஸ்ரீமதி கோமதி ராஜாங்கம் என்கிற பெண்மணி ஆன்மீக கட்டுரைகளை சிறப்பாக எழுதக்கூடியவர். இவர்தான் ஆவுடையக்காள் பற்றி மேலே சொன்ன இரு பத்திரிகைகளிலும் 50 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டுரைகள் எழுதியவர். இவர் யார் என்றால் செல்லம்மா பாரதியின் சகோதரியின் மகளாவார். மகாகவி பாரதி இவருடைய சித்தப்பா.

கங்கைக்கரையில் (காசியில்) ஸ்ரீமதி கோமதி ராஜாங்கத்தை சந்தித்ததாகவும் அப்போது அவரிடம் ஆவுடையக்காள் பாடல்களை ஒன்று திரட்டி, அவரைப்பற்றிய கட்டுரைகளையும் ஒன்று திரட்டி நூலாக்க வாக்குறுதி கொடுத்ததாக என்னிடம் தெரிவித்தார் நித்தியானந்த கிரி சுவாமிகள்.

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக மிகுந்த சிரமம் எடுத்துக் கொண்டு நூல் ஆக்கினார் ஸ்ரீ நித்தியானந்த கிரி ஸ்வாமிகள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த நூலை தயார் செய்ததும் இதற்கான வெளியீட்டு விழா மதுரை பக்கத்தில் நடைபெற்றது. நூலினை வெளியிடக்கூடிய பாக்கியம் எனக்கு கிடைத்தது. முதல் பிரதியை நீதி அரசர் அருணாச்சலம் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். இந்த நிகழ்ச்சியில் ஆவுடையக்காள் பற்றி ஸ்ரீ கிருஷ்ண ப்ரேமி ஸ்வாமிகள் (அண்ணா) சிறப்பு உபன்யாசம் நிகழ்த்தினார்கள். என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் அந்த நாள்.

சென்னையில் நாரத கான சபா அரங்கில் இந்த நூல் மீண்டும் வெளியீடு செய்யப்பட்டது. என் இனிய நண்பர் செங்கோட்டை ஸ்ரீராம் இணைப்பு உரை வழங்கினார். நூலுடன் ஆவுடையக்காள் பாடல்களை ஒலிநாடா வாகவும் வெளியீடு செய்தார்கள். இந்த நிகழ்ச்சியிலும் கிருஷ்ணப்ரேமி சுவாமிகள் சிறப்புரை நிகழ்த்தினார்கள். நித்தியானந்த கிரி சுவாமிகள் தலைமை தாங்கினார். 2002ஆம் வருடம் நடைபெற்ற நிகழ்ச்சிகள் இவை!

சிறு பெண்ணாக இருக்கும் பொழுதே உயர்ந்த தியான சிந்தனையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் ஆவுடை அக்காள்.

நெல்லை வட்டாரத்திலுள்ள வீடுகளில் அக்காலத்தில் பேச்சு வழக்கில் இருந்த மிகவும் எளிமையான தமிழ் நடையில் அக்காவின் பாடல்கள் இயற்றப்பட்டு இருந்தன. ஆன்மிக அனுபவங்களையும், வேதாந்தக் கருத்துக்களையும் கொண்டதாக அமைந்தது பாடல்கள்!!

கிராமத்திலுள்ள சாதாரண காட்சிகளும், வீட்டு விசேஷங்களும் அரிய வேதாந்த சிந்தனைகளாக அக்காளின் பாட்டில் இடம்பெற்றிருப்பதை நாம் காணலாம்.

சின்ன வயதிலேயே இவருக்கு திருமணம் நடைபெற்றது. இளம் வயதிலேயே விதவையானார். இவரை ஊரார் எங்கும் வெளியில் அனுப்ப (விதவையான தால்) மறுத்துவிட்டனர். அப்பொழுது ஒரு அதிசயம் நடந்தது.

“காலில் நாலைந்து சுற்றுகளாகக் கட்டப்பட்ட சலங்கைகள் நாட்டிய பாவத்தில் அவர் மெய்மறந்து ஆடும்போது லயமாக சப்தித்தன……… வலது தோளில் சிறு தம்புரா அது ஓம் என்று ரீங்காரம் செய்து கொண்டே இருந்தது. இடதுகையில் சிப்ளா…. ஜில் ஜில் என்று ஒலித்தது. தலையில் பட்டுத் தலைப்பாகை சிவப்பு நிறத்தில் மயில் தொகை போல முதுகுப்புறம் ஆடியது. சிகப்புக் கயிற்றினால் கட்டப்பட்ட உஞ்சவிருத்திச் சொம்பு தோளில் தொங்கியது.

கோவிந்த பஜ….. மனஸா …. என்ற நாமாவளியை கம்பீரமாக அலை மோதும் குரலில் பாடிக்கொண்டு மெல்ல மெல்ல நர்த்தன பாவத்துடன் கிராமத்திற்குள் நுழைந்தார் ஸ்ரீதர வேங்கடேச ஐய்யாவாள்.

ஆவுடையக்காள் வீடு வந்ததும் பஜனையை நிறுத்தி அந்த வீட்டை உற்றுப் பார்த்தார். ஓடிவந்து சரணடைந்தார் ஆவுடை அக்காள். அன்று முதல் அந்த சிறுமி அவரின் சிஷ்யை ஆனாள். வாயிலிருந்து வேதாந்தப் பாடல்கள் மடமடவெனக் கொட்டத் தொடங்கியது. ஸ்ரீதர ஐய்யாவாளின் பரிபூரண அனுக்கிரகம் கடைசிவரை ஆவுடை அக்காளுக்கு இருந்தது”- என்கிறார் கோமதி ராஜாங்கம் ஒரு கட்டுரையில்.

வேதாந்தக் கப்பல்,
பகவத் கீதா ஸார சங்கிரஹம்,
வேதாந்த பல்லி,
தக்ஷிணாமூர்த்தி படனம்,
ப்ரும்ம மேகம்,
வேதாந்த கும்மி,
ப்ரும்ம ஸ்வரூபம்,
வேதாந்த ஆச்சே போச்சே,
வேதாந்த வண்டு,
வேதாந்தப் பள்ளு,
வேதாந்த அம்மானை,
வேதாந்த வித்யா ஸோபனம்,
வேதாந்த குறவஞ்சி நாடகம்

இப்படி அநேக பாடல்களை எழுதினார் ஆவுடை அக்காள்.

” இவரை ஒரு அத்வைத ஞானி என்று சொல்லலாம். தமிழகத்தில் அவ்வையார், காரைக்கால் அம்மையார் முதலியவர்களைப் போல் ஆவுடையக்காளும் ஒருவள் என்று சொல்லாமலேயே விளங்கும்” என்கிறார் கிருஷ்ணப்ரேமி சுவாமிகள்.

பகவான் ஸ்ரீ ரமண மகரிஷியின் முன்னிலையில் பக்தர்கள் ஆவுடையக்காளின் பாடல்களைப் பாடுவது உண்டு. ரமண பகவான் ஆவுடையக்காளின் பாடல்களை ரசித்துக் கேட்பார் என்கிறார் பிரபல உபன்யாசகர் ஸ்ரீமான் நொச்சூர் வெங்கட்ராமன்.

ரிஷிகேஷம் ஸ்ரீ சிவானந்த சரஸ்வதி சுவாமிகள் “மகாத்மாக்கள் சரித்திரங்கள்” – என்ற நூலில் ஆவுடையக்காளின் வரலாற்றை எழுதியுள்ளார்.

பழைய காலத்து இண்டியன் இல்லஸ்ட்ரேட் வீக்லியில் ஒரு கட்டுரை அக்காவைப் பற்றி வெளியாகி இருந்ததாகவும் அதைத் தான் படித்ததாகவும் அதன்பின்னரே அக்காவைப் பற்றி, அவருடைய கவிதைகளைப் பற்றி தான் தேட முற்பட்டதாகும் கோமதி ராஜாங்கம் சங்கர கிருபாவில் எழுதியிருக்கிறார்

மகாகவி பாரதி நிவேதிதா தேவியைச் சந்தித்த பின்பு தான் அவரிடம் பெண்களைப் பற்றி ஒரு பெரிய அபிப்ராயம் ஏற்பட்டது என்றும்,புதுமைப் பெண்களைப் பற்றி அவர் குரல் கொடுத்தார் என்றும் சொல்லப்படுவதுண்டு.

பாரதியின் உறவினரான (மகள் உறவுமுறை) ஸ்ரீமதி கோமதி ராஜாங்கம் அவர்கள் பெண்களைப் பற்றி பாரதி உயர்வாக பாடவும், வேதாந்த கருத்துக்களை தனது பாடல்களில் பாரதி கொண்டு வரவும் முக்கிய காரணகர்த்தாவாக விளங்கியவர் ஆவுடை அக்காள் என்று தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். பாரதிக்கு முற்பட்டவர் ஸ்ரீ ஆவுடையக்காள் என்பது குறிப்பிடத்தக்கது. செல்லம்மா பாரதியின் சகோதரி சந்நியாசினி கிருஷ்ணானந்தினி(சொர்ணத்தம்மாள்) அவர்களை கடையத்தில் தாய் வார இதழுக்காக நான் பேட்டி எடுத்தபோது இதே கருத்தை வலியுறுத்தி சொன்னார்கள்.

அத்வைத ஞானி ஸ்ரீ ஆவுடையக்கா பற்றி முனைவர் காந்திமதி சிவகுருநாதன் அவர்கள் சென்னைப் பல்கலைக்கழகம் மூலம் ஆராய்ச்சிசெய்து முனைவர் பட்டமும் பெற்றிருக்கிறார்.

சாக்ஷி நிலை கண்டவர்க்கு தன்மயமாய் ஆனவர்க்கு
ஸத்து சித்தானந்த ஸத்குணருக்கு
ஆனந்தத்தால் விளங்கும் அவனி பதினாலையும்
அற்புதமாய் பார்த்திருந்த ஆத்மாவுக்கு
ஜெயமங்களம் இது அக்காளின் மங்கள வாக்கியப் பாடலாகும்.

அக்காவைப் பற்றி படித்தால், அக்காவின் உடைய பாடல்களைப் படித்தால் இந்த ஜென்மம் சாபல்யம் பெறும்………..

கீழே செங்கோட்டை ஸ்ரீ ஆவுடை அக்காள் நூலின் முகப்புப் பக்கம் மற்றும் முதல் பக்க விவரம். ஸ்ரீதர ஐய்யாவாள் திரு உருவப்படம்.

Leave a Reply