தை அமாவாசை 

 

தை அமாவாசை சிறப்பான ஒரு நாளாகும். அபிராமி பட்டர் திருக்கடையூர் அம்பாள் மீது மிகுந்த பக்தி கொண்டவர். அவர் அம்மனை துதித்துக் கொண்டிருக்கும் பொழுது சரபோஜி மன்னர் வந்து சேர்ந்தார்.

மன்னரைக் கவனிக்காமல் அம்பாள் உபாசனை செய்து கொண்டு இருந்தார் பட்டர். கோபம் கொண்ட மன்னர் இன்று என்ன நாள்? என்று வினவினார். உடனே இன்று பௌர்ணமி என்று பதிலளித்தார் அபிராமி பட்டர்.காரணம் அம்பாளின் முகத்தையேப் பார்த்துக் கொண்டிருந்தவருக்கு பௌர்ணமி தான் நினைவுக்கு வந்தது!! ஆனால் உண்மையில் அன்று தை அமாவாசை ஆகும்.

மன்னருக்குக் கோபம் வந்தது. இன்று என்ன நாள்? என்று தெரிவிக்க வேண்டும் என்று மீண்டும் கட்டளையிட்டார்.

அம்பிகையின் மீது மிகுந்த பக்தி கொண்ட பட்டர் நூறு பாடல்களைப் பாடினார். பாடல்களைக் கேட்ட அம்பிகை மனம் குளிர்ந்தது. பௌர்ணமியாக சந்திரனை ஜொலிக்கச் செய்த நாள் தை அமாவாசை ஆகும்.

பட்டர் பாடியதை அபிராமி அந்தாதி என்றும் அப் பட்டரை அபிராமி பட்டர் என்றும் பின்னர் அழைக்க ஆரம்பித்தனர்.

தை அமாவாசை பித்ருக்களுக்கு முக்கியமான நாளாகும். இன்று தர்ப்பணம் செய்தால் அது நமது இறந்துபோன முன்னோர்களுக்குப் போய் சேரும் என்பது நம்பிக்கை.

முதன்முதலாக முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்தது யார் தெரியுமா?

வராக அவதாரத்தில் பூமியைக் கடலிலிருந்து வெளியே கொணர்ந்தார் ஸ்ரீ வராக மூர்த்தி. அப்பொழுது மத்தியான நேரம். அந்த நேரத்தில் தன்னுடைய உடலுக்கு வேண்டிய கடமைகளைச் செய்ய எண்ணியபோது வாயிலிருந்து மூன்று பற்கள் மூன்று உருண்டைகளாக பூமிக்குத் தென்புறத்தில் போய் விழுந்தன! அவையே மூன்று தலைமுறை பித்துர்க்கள் ஆகின.

அந்த மூன்று தலைமுறைக்கு பிண்டம் வைத்து பித்ரு காரியம் செய்தார் வராகர்.இந்த காரியத்தை முதன் முதலில் சாதித்தவர் அவர்தான். சரீரம் இல்லாதவர்களுக்கும் பிண்டம் தரவேண்டும் என்றும் பித்ருக்களுக்கு தருவது தன்னையே அடைகிறது என்றும் வராகர் எடுத்துரைத்தார். மகாபாரதம் சாந்தி பருவம் 355 ஆவது அத்தியாயம் இதைப்பற்றி தெளிவாகக் கூறுகிறது.

சென்னை கோயம்பேட்டில் லவகுசா இருவரும் வழிபட்ட சிவன் கோவில் உள்ளது. தினசரி சிவபூஜை செய்து தாங்கள் நீராட குளம் ஒன்றையும் அமைத்தார்கள் லவ-குஜா இருவரும்.

இதில் மகிழ்ந்த சிவபெருமான் அவர்களுக்கு தை மாத அமாவாசை அன்று காட்சி தந்தார்.அவரின் திருவருளாலே லவனும் குஜனும் ஸ்ரீராமனிடம் இணைந்தனர் என்று இக்கோவிலின் ஸ்தலப் புராணக் கதை சொல்கிறது.

இங்குள்ள சுவாமியின் பெயர் ஸ்ரீ குறுங்காலீஸ்வரர். அம்பிகையின் பெயர் ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி. லவனும் குஜனும் கட்டிய கோயில் இது என்று சொல்வார்கள்.கோயம்பேடு என்றதும் மார்க்கெட்டுடன் இக் கோயிலும் நினைவுக்கு வர வேண்டும்.

varahaperumal.jpeg

Leave a Reply