பாரத கலாசாரத்துடன் இயைந்த தமிழ் மரபுகளை பாதுகாக்க வேண்டும்: இல.கணேசன்!

தேஜஸ் பவுண்டேஷன் சார்பில் உ.வே. சாமிநாத ஐயர் 167வது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், வரலாற்று ஆய்வாளர் சித்ரா மாதவன், ஆலய வரலாற்று ஆவணப் பதிவாளர் சிவமஞ்சரி ஆட்சிலிங்கம் ஆகியோருக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தது தேஜஸ் அமைப்பு.

பிப்.21 ஞாயிற்றுக் கிழமை, சென்னை, மயிலாப்பூர் கோகலே சாஸ்திரி அரங்கத்தில் மாலை 6 மணிக்கு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், உ வே சாமிநாத ஐயர் திருவுருவப் படத்துக்கு முக்கியப் பிரமுகர்கள் மலர் அஞ்சலி செய்தனர். ஆடிட்டர் ஜெ. பாலசுப்பிரமணியம் வரவேற்புரை நல்கினார்.

தமிழக அரசின் சார்பில் கலைமாமணி விருது இந்த ஆண்டு ஆடிட்டர் பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு வழங்கப்பட்டதை ஒட்டி கலைமகள் சார்பாக அவருக்கு நினைவுப் பரிசுகளை கலைமகள் பதிப்பாளர் திரு ராஜன் அவர்களும் அருட்செல்வர் மகாலிங்கம் அவர்களின் தனிச் செயலாளராக இருந்த திரு ரவீந்திரன் அவர்களும் வழங்கினார்கள்.

தமிழ்த் தாத்தா அவர்களைச் சந்தித்த பெரிய ஆளுமைகளைப் பற்றி கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் எடுத்துரைத்தார். மகாத்மா காந்தி, மகாகவி பாரதியார், நாகஸ்வர சக்கரவர்த்தி ராஜரத்தினம் பிள்ளை, திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் மகா சன்னிதானம் சுப்பிரமணிய தேசிகர், கல்கி, தாகூர், திலகர் போன்ற பெரிய ஆளுமைகள் உடன் நடந்த சந்திப்புகளை விவரமாக எடுத்துரைத்தார் கீழாம்பூர்.

தாகூர் அவர்கள் சென்னைக்கு வந்திருந்தபோது உ வே சாமிநாத ஐயர் அவர்களை அவருடைய வீட்டில் வைத்து சந்தித்தார். தாகூர் அவர்களுடைய விருப்பத்தின் பேரில் இந்த சந்திப்பு நடந்தது. கல்கத்தாவுக்கு திரும்பியதும் உவேசா பற்றி வங்காள மொழியில் ஒரு கவிதை எழுதினார் தாகூர்.

கவிதையின் ஓரளவான மொழிபெயர்ப்பு இது. தமிழ் மொழிக்கு ஐந்து ஆரங்களை மிகச் சிறப்பாக சூட்டி உள்ளீர்கள். தங்களை கும்பமணி போல் பார்க்கிறேன். பல மன்னர்கள் ஆராதித்த தமிழை பல நல்ல இலக்கியங்கள் உள்ள தமிழை மேம்படுத்தியவர் நீங்கள்… என்று குறிப்பிட்டிருந்தார்.

மஞ்சரியில் ஆசிரியராக இருந்த த.நா.சேனாபதி அவர்கள் தாகூரின் கவிதையை சரியாக மொழிபெயர்த்துள்ளார் என்று விழாவில் கருத்து தெரிவித்தார் கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர்.

தாய்மொழி தினமான இந்த நாளில் உ வே சாமிநாத ஐயர் அவர்களைப்பற்றி சிந்திப்பது நல்லது. இந்த நிகழ்ச்சியில் வரலாற்று ஆய்வாளர் முனைவர் சித்ரா மாதவன் அவர்களுக்கும் தென்னிந்தியக் கோவில்களை ஆய்வுசெய்த ‘சிவமஞ்சரி’ ஆட்சிலிங்கம் அவர்களுக்கும் தேஜஸ் விருது வழங்கி சிறப்பிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என தனது தனது தலைமை உரையில் குறிப்பிட்டார் இல.கணேசன் அவர்கள்.

தாய்மொழியைப் பற்றி நாம் பெருமிதம் கொள்ள வேண்டும். நம்முடைய கையெழுத்து தாய்மொழியிலேயே இருக்கவேண்டும். நான் கையொப்பம் இடுவது எல்லாமே எனது தாய்மொழியிலேயே தான்! என்றார் இல கணேசன்.

தமிழ்மொழியின் கலை கலாசாரம் மிக உயர்ந்த சிந்தனைகளுடன் கூடியது. பாரத கலாசாரத்தோடு இயைந்து செல்லக்கூடிய தமிழ் மரபுகளை நாம் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தார் இல கணேசன்!

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகளும் கல்வி போதனா முறைகளும் செய்யும் ‘நிதர்சனம்’ அமைப்பின் நிறுவுனர் சாய் கிருஷ்ணன் அவர்கள் விழாவில் கௌரவிக்கப்பட்டார். மேலும், அவருடைய கல்வி போதனா வகுப்பில் கலந்து கொள்ளும் மாணவ மாணவிகள் ஒன்பது பேரும் கொளரவிக்கப்பட்டார்கள்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தேஜஸ் அறக்கட்டளையின் தலைவர் பிடி டி ராஜன் செய்திருந்தார். நிகழ்ச்சியில் வந்திருந்தவர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு இணைப்புரையும் வழங்கினார் சிவி சந்திரமோகன்.

thejas-award1.jpeg

Leave a Reply