வருண பகவான்.. சில சிந்தனைகள்!

வருண பகவான் சில சிந்தனைகள்………………..
கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்…………
சென்னையில் கடந்த மாதம் வரை நல்ல மழை பெய்தது. வருண பகவான் கண்ணைத் திறந்தார். சென்னைக்கு ஒரு வருடத்திற்கு தண்ணீர் கஷ்டம் இல்லை. இப்படி எல்லாம் மக்கள் பேசிக்கொள்வதைக் கேட்கிறேன். வருண பகவான் யார்? எனச் சிந்திக்கத் தொடங்கினேன். ரிக் வேதத்திலும் தொல்காப்பியத்திலும் வருண பகவானைப் பற்றியக் குறிப்புகள் காணப்படுகின்றன. அவற்றையெல்லாம் சொல்வதே என்னுடைய நோக்கம் ஆகும்.
வருண காயத்ரி:
ஓம் ஜலபிம்பாய வித்மஹே நீல் புருஷாய தீமஹி தன்னோ வருணப் ப்ரசோதயாத்
மாயோன் மேய காடுறை உலகமும் சேயோன் மேய மைவரை உலகமும் வேந்தன் மேய தீம்புனல் உலகமும் வருணன் மேய பெருமணல் உலகமும்
மேலே உள்ளது தொல்காப்பியப் பொருளதிகாரப் பாடல் ஆகும்.
கடல் சார்ந்த நெய்தல் இன மக்கள் வருணனை வழிபட்டனர் என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. சந்தியாவந்தனம் மந்திரத்தில் தினசரி வருணனை எண்ணி வழிபாடு செய்கிறோம்.
கிழக்கில் இந்திரன், தென்கிழக்கில் அக்னி, தெற்கில் எமன், தென்மேற்கில் நிருதி, மேற்கில் வருணன், வடமேற்கில் வாயு, வடக்கில் குபேரன், வடகிழக்கில் ஈசானன், ஆகாயமான ஊர்த்துவ திசையில் பிரம்மன், பாதாளத்தைத் தாண்டியுள்ள அதோ திக்கில் விஷ்ணு- ஆகியோர் இருந்து உலகைக் காவல் புரிகின்றனர். ஆகாயம் பாதாளம் இரண்டையும் தவிர்த்து மற்ற எட்டு திசைகளையும் அஷ்டதிக் பாலர்கள் காவல் காப்பதாக கொண்டாடுகிறோம்.
மேற்கில் வாழும் வருணன் பெரும் நீர்ப் பரப்புக்குச் சொந்தக்காரன். குபேரனை விட பணக்காரன். கடலுக்கு அடியில் பட்டினம் அமைத்துக்கொண்டு வாழும் வருணனுக்கு மகர மீன்கள் காவல் புரிகின்றனர். கடல் அரசனான வருணனுக்கு பணிவிடை செய்ய மச்சக்கன்னிகைகளும், நாக கன்னிகளும் உள்ளனர் என வருண புராணம் சொல்கிறது!
அக்காலத்தில்கடல் மார்க்கமாகப் பயணம் செய்தவர்கள் வருணனை ஆபத்துக்களில் இருந்து காப்பாற்ற பூஜை செய்தனர். வெண்மை நிறம் கொண்டவர். இவரை ஜலாதிபதி, மேகாதிபதி என்றும் அழைப்பார்கள். இவருடைய தேவி பத்மினி காளகண்டி என்பவர்களாவர்.
மூங்கில் அரிசியால் வடிக்கப்பட்ட சாதம் தயிர் சாதம் ஆகியன இவருக்கு உரிய நேவேத்தியம் களாகும்.
ஓம் ஹாம் வம் போகிநி சகிதாய பாச ஹஸ்தாய வருணனே நம:
வெள்ளை நிறமும் மீன் வாகனமும் பத்மம் பாசம் அபயவரதமும் கொண்ட வருண தேவரை வாழ்த்துவோம் என்பது மேலே உள்ள சுலோகத்தின் சுமாரான பொருளாகும்.
உயிர்கள் வாழவும் இயற்கை செழிக்கவும் நீரே ஆதாரம் என்பதால் வருணன் கடவுளாக வழிப் பாட்டுக்கு உரியவர் ஆகிறார்.
வருணனின் சிறப்பை உணர்ந்தே திருவள்ளுவ நாயனார் கடவுள் வாழ்த்துக்கு அடுத்த அதிகாரமாக வான் சிறப்பை வைத்தார் என்று சொல்லலாம்.
ராமபிரான் கடல்மேல் பாலம் கட்ட விரும்பியபோது வர்ணனை நோக்கி தியானிக்கிறார். பின்னர் அவரையே கட்டிக்கொண்டு பாலத்தைத் திறம்படக் கட்டுகிறார் வானரங்களின் உதவியோடு என்பதை இங்கே நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.
இந்த உலகை காப்பவன், விவசாயத்தை காப்பவன், குடிதண்ணீர் வழங்குபவன், வருணன் என்பதை உணர்ந்து அவனை என்றும் நினைத்து நமஸ்கரிப்போம்!!

varunan.jpg

Leave a Reply