சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்!

கலைமகள் 2023 செப்டம்பர் மாதம் வெளியாக உள்ள தலையங்கத்தின் பகுதி……

தலையங்கம்
மலர் 92 இதழ் 9 செப்டம்பர் 2023

‘‘சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்…

– மகாகவி பாரதியார்

வணக்கம்! கலைமகள் அன்பர்களே!

மனதில் எழுந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பாரத தேசம் விண்ணில் மிகப்பெரிய சாதனையைச் செய்திருக்கிறது. ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டிய நிகழ்வு, ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி நடைபெற்றுள்ளது!

இஸ்ரோ விஞ்ஞானிகளால் சந்திர மண்டலத்திற்கு அனுப்பப்பட்டது சந்திரயான் 3 விண்கலம். இதில் அனுப்பப்பட்ட ‘விக்ரம்’ என்று பெயரிடப்பட்டுள்ள லேண்டர் சாதனம் நிலவில் பத்திரமாக ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி மாலை ஆறு மணி மூன்று நிமிடங்கள் ஆகும்போது இறங்கியது. ‘பிரஜ்ஞான்’ என்ற பெயரிடப்பட்டுள்ள ரோவர் வாகனம் நிலவில் கால் பதித்து சுற்றி வந்து தன் ஆய்வுகளைத் துவக்கியுள்ளது!

‘‘பூமியில் எடுத்துக் கொண்ட உறுதியை இந்தியா நிலவில் நிறைவேற்றி உள்ளது. நிலவில் கால் பதித்து விட்டோம்; இனி நிலவில் நடை போடுவோம்; இது இந்தியாவின் வெற்றி மட்டுமல்ல; ஒரேபூமி ஒரே குடும்பம் ஓர் எதிர்காலம் என்ற நம் அணுகுமுறை உலகம் முழுவதும் எதிரொலிக்கிறது. இந்த வெற்றி மனித குலத்துக்குச் சொந்தமானது. புதிய இந்தியாவின் புதிய எழுச்சிக்கு நாம் சாட்சியாக உள்ளோம்.’’ இவ்வாறு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தனது எண்ணத்தை வெளிப்படுத்தியதில் முழுமையான அர்த்தம் இருக்கிறது.

உலகத்திற்கு வழி காட்டும் பாரதம் வலிமையானதாக இருக்கும். பாரதம் ஒற்றுமையோடு, அஹிம்சையை என்றும் போதிக்கும். இதில் எள்ளளவும் எந்த நாட்டிற்கும் சந்தேகம் வேண்டாம். மனித குலத்திற்கு ‘அன்பே சிவம்’ என்று அன்பின் வலிமையைப் போதித்த நாடு நமது பாரத நாடு.

‘‘நிலவின் தென் துருவப் பகுதியில் தரை இறங்கிய முதல் நாடு’’ என்ற பெருமையையும் இஸ்ரோ விஞ்ஞானிகள் இந்தியர்களுக்குப் பெற்றுத் தந்துள்ளார்கள். நிலவின் மேற்பரப்பில் ஒரு நிலவு நாள் அதாவது 14 பூமி நாட்கள் மட்டுமே செயல்பட முடியும் என்பதால், இறங்கிய வேகத்தில் தன் ஆய்வுப் பணிகளை பிரஜ்ஞான் துவக்கியுள்ளது. மொத்தம் 600 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள சந்திரயான் மூன்று வகைத் திட்டங்களால் சந்திரனைத் தொட்டுள்ளோம். இந்திய விண்வெளி விஞ்ஞானிகளின் சாதனைகளின் மகுடமாகும் இது!!

சந்திரயான்-3 விண்கலத்தின் இலக்கு, சந்திரனில் தரையிறங்கி ஆய்வு மேற்கொள்வது. இதற்காக விண்கலத்துடன் (ஆர்பிட்டர்) ‘விக்ரம்’ என்று பெயரிடப்பட்ட லூனார் லேண்டரும் (நிலவில் தரையிறங்கும் கருவி), அதனுள் பொதியப்பட்ட ‘பிரஜ்ஞான்’ என்று பெயரிடப்பட்ட ரோவரும் (நகர்ந்து சென்று ஆய்வு செய்யும் கருவி) அனுப்பப்பட்டன.
‘விக்ரம்’ என்றால் வெற்றி என்று பொருள். அது மட்டுமல்ல; இந்த ‘விக்ரம்’ என்ற சாதனையின் பின்புலத்தில் மகத்தான விஞ்ஞானிகளின் தீர்க்கதரிசன முயற்சிகள் ஒளிர்கின்றன.

இன்று உலக அரங்கில் விண்வெளி ஆராய்ச்சியில் நமது நாடு முன்னிலை வகிக்கிறது. பிற நாடுகளின் செயற்கைக்கோள்களை வர்த்தகரீதியாக விண்ணில் செலுத்தும் வல்லமையையும் நாம் பெற்றிருக்கிறோம். தவிர கண்டம் தாண்டிச் செல்லும் அதிநவீன ஏவுகணைகளையும் நாம் உருவாக்கியிருக்கிறோம். இதற்கெல்லாம் மூல காரணமானவர்தான் விண்வெளி விஞ்ஞானியான விக்ரம் சாராபாய். இந்த நேரத்தில் அவரை நாம் நினைவு கொள்ள வேண்டும்.

பாரதம் சுதந்திரம் பெற்ற பிறகு, விண்வெளித் துறையில் நாடு வளர வேண்டியதன் அவசியத்தை விக்ரம் சாராபாய் மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தினார். அவருக்கு மூத்த விஞ்ஞானியான ஹோமி ஜஹாங்கீர் பாபாவும் உறுதுணையாக இருந்தார். இவர்களின் உந்து சக்தியால் பல ஆய்வுகள், பல அறிஞர் பெருமக்களால் மேற்கொள்ளப்பட்டன. உலகம் போற்றும் மாமேதை அப்துல்கலாம் அவர்களும் தேசத்திற்காக ஆற்றிய பணிகள் நினைவு கூரத் தக்கதாகும்.

நிலவில் வெற்றிகரமாக தரை இறங்கியதன் பயனாக நமக்கு கிடைக்கப் போகும் பலன்கள் என்ன? இது பலரது புருவத்தை உயர்த்தும் கேள்வியாகும். அமெரிக்கா சீனா ரஷ்யா இந்த நாடுகளைத் தொடர்ந்து நான்காவதாக நிலவில் கால் பதித்திருக்கும் நாடு இந்தியா. அதிலும் குறிப்பாக நிலவின் தென் துருவத்தில் முதன்முதலாக கால் பதித்த நாடும் இந்தியாதான். நிலவில் உள்ள பனிக்கட்டி, காற்று, என்ன மாதிரியான மண் அமைப்பு உள்ளது? என்ன மாதிரியான மினரல்கள் இருக்கின்றன? என்று ஆய்வு செய்வதோடு நிலவின் வெளி மண்டல அமைப்பையும் ஆய்வு செய்யும் நமது விக்ரம் லேண்டர்.

நிலவில் இருக்கும் எரிமலைகள் குறித்தும் ஆய்வு செய்யப்படும். மேலும் ஹைட்ரஜன் தயாரிக்கவும், நிலவில் ஆக்சிஜன் உருவாக்கவும் நிலவில் சுரங்கப் பணிகள் போன்றவற்றைப் பற்றியும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

சென்ற முறை விண்ணிற்கு விண்கலத்தை அனுப்பிய போது அதில் தோற்றுப் போனோம். விஞ்ஞானி, கே.சிவன் உடைந்து போனார். தேசத்தின் பிரதமர் அவரை அந்த இடத்திலேயே தேற்றுவதைக் கண்கூடாகக் கண்டோம். "தோல்வியைக் கண்டு அஞ்சக் கூடாது; பூஜ்ஜியத்தில் இருந்துதான் எண்கள் ஆரம்பம் ஆகின்றன" என்று டாக்டர் அப்துல்கலாம் அவர்கள் சொல்வார்கள். இன்று நமது விஞ்ஞானிகள் சாதித்துக் காட்டியுள்ளார்கள்.

மிகவும் கவனமாக ஒவ்வொரு அடியும் எடுத்து வைக்கப்பட்டது. சந்திராயன் திட்ட பணிகளுக்காக நிலவில் தென் துருவத்தில் உள்ள மண்ணின் தன்மைக்கு ஏற்ற மண்ணைப் பூமியில் கண்டறிந்து அதில் சோதனைகள் நடத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்தார்கள்.

நிலவில் ‘அனார் தோசைட்’ எனப்படும் பாறை அளவுக்கு உறுதியான மணல் பரப்பு காணப்படுகிறது. இந்தத் தன்மை உடைய நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சித்தம் பூண்டி, குன்னாமலை கிராமங்களில் இருந்து 50 டன்னுக்கும் அதிகமான மண் இஸ்ரோவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் ரோவரைத் தரையிறக்கி இஸ்ரோ விஞ்ஞானிகள் சோதனை மேற்கொண்டனர். இப்படித்தான் சோதனைகளில் ஒவ்வொரு நகர்வுகளும் இருந்தன.

‘இஸ்ரோ’ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையம் 1962-இல் உருவாக்கப்பட்டது. அதற்கு அடுத்த ஆண்டு முதல் ராக்கெட்டைச் செலுத்த முயற்சிகள் நடைபெற்றன. அந்த ராக்கெட்டின் பாகங்கள் சைக்கிளில் எடுத்துச் செல்லப்பட்டன. உலக நாடுகள் நம்மைப் பார்த்துக் கேலி செய்தன. தற்போது ராக்கெட் அனுப்புவது, சைக்கிளில் செல்வது போன்று எளிமையான வித்தை என்பதை நமது விஞ்ஞானிகள் உலக நாடுகளுக்குப் புரிய வைத்திருக்கிறார்கள். கடந்த அறுபது ஆண்டுகளில் நமது விண்வெளி விஞ்ஞானம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்திருக்கிறது என்பதை சொல்லித்தான் ஆக வேண்டும்.

‘‘நிலவின் தென்பகுதியில் விண்கலத்தை தரையிறக்கிய இஸ்ரோவுக்கு வாழ்த்துகள். இந்தப் பயணத்தில் உங்கள் கூட்டாளியாக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்’’ – என்கிறது நாசா. நம்மோடு கைகோர்க்க பல வெளிநாடுகள் தயாராகி விட்டன. பல வெளிநாட்டு விண்கலங்கள் நமது மண்ணிலிருந்து நமது இஸ்ரோ விஞ்ஞானிகளின் உதவியுடன் விண்ணுக்குச் செலுத்தப்படுகின்றன. இதன் மூலம் நமது விண்வெளி துறைக்கும் லாபம் கிடைக்கிறது. நம்முடைய ஒவ்வொரு முயற்சிகளும் மனித குலத்திற்கு தேவையானதாகவே இருக்கும் என்பதை நாம் எல்லோரும் அறிவோம்.

“சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்!” என்று பாடிய மகாகவி பாரதியார் கண்ட கனவை நனவாக்கி இருக்கிறார்கள் நமது விஞ்ஞானிகள்! கவிஞரின் வாக்கு பொய்க்காது!!

கீழாம்பூர் எஸ்.சங்கர சுப்பிரமணியன்
ஆசிரியர், கலைமகள்.

Leave a Reply