தைப் பூசமும் ஐஸ்கிரீமும்

தைப்பூசமும் ஐஸ்கிரீமும்………..

கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்……….

மயிலாப்பூரில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தைப்பூசத் திருவிழாக் காட்சியில் எடுக்கப்பட்டப் புகைப்படத்தை கீழே பார்க்கிறீர்கள். முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த நாளாக தைப்பூச நாள் கொண்டாடப்படுகிறது.

உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இந் நாளைச் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். தை மாதத்தில் பூச நட்சத்திரத்தோடு வரும் பௌர்ணமி நாளை விசேஷ நாளாக இலங்கையில் உள்ளவர்களும் அனுசரிக்கிறார்கள். வயலில் நெற்கதிர் அறுத்து இன்று சிறப்பு வழிபாடு(யாழ்ப்பாணத் தமிழர்கள்)செய்வார்கள்.

மயிலாப்பூர் தெப்போற்சவக் கூட்டம் எல்லாம் வீடு திரும்பிய பின் மைலாப்பூர் தெப்பக்குளத்தை முருகனை த்யானித்துக் கொண்டு முகக் கவசம் அணிந்தபடி சுற்றி வந்தேன். இரண்டு குழந்தைகள் ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டு இருந்ததைப் பார்த்தேன்……..

தென்கச்சி சுவாமிநாதன் அவர்கள் சொன்ன ஒரு விஷயம் எனக்கு ஞாபகத்திற்கு வந்தது…..

“ஐஸ்க்ரீமைக் கப்பில் சாப்பிட்ட பின்பு அந்த கப்பை தூர எறிந்துவிடுவார்கள்! இந்தக் கப்புகளைப் பொறுக்கி எடுத்து அப்புறப்படுத்த கலிபோர்னியா டவுன்ஷிப்பிற்கு நிறைய செலவு பிடித்தது! ஒரு ஆலோசனைக் கூட்டத்திற்கு டவுன்ஷிப் ஏற்பாடு செய்தது.

ஒவ்வொருவரும் தங்கள் பங்குக்கு யோசனைகளைத் தெரிவித்தார்கள். ஒருவர் சொன்னார் கப்பையே சாப்பிடுகிற மாதிரி தயார் செய்துவிட்டால்…. குப்பையை அகற்றும் செலவு கொஞ்சம் குறையும் என்றார். அவருடைய யோசனையின் படி உருவானதுதான் கோன் (வேஃப்பர்) ஐஸ்கிரீம்”.

சுமார் 40 ஆண்டுகளுக்கு (1980களில்) முன்பாக நெல்லைக் கலாச்சாரச் சங்கத்திற்காக நானும் என் நண்பர் பி ஆர் விசுவநாதன் அவர்களும் ஏற்பாடு செய்த கூட்டத்தில் மேற்கண்டவாறு தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்கள் பேசியதாக ஞாபகம்.

முதன்முதலாக தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்கள் ஒரு மணி நேரம் பேசியது நெல்லைக் கலாச்சாரச் சங்கம் ஏற்பாடு செய்த கூட்டத்தில் தான்!

“பத்து நிமிடங்கள்அல்லது 15 நிமிடங்கள் அதற்குமேல் நான் பேசியது இல்லை. நெல்லை வானொலியில் இருந்தபோதுகூட பல ஊர்களில் பொதுக்கூட்டங்களுக்குப் போயிருக்கிறேன். அங்கு எல்லாம் கூட அதிகபட்சமாக 15 நிமிடங்கள் தான் பேசி இருக்கிறேன். முதன்முதலாக என்னை ஒருமணிநேரம் சிறப்புரையாற்ற கீழாம்பூர் கேட்டுக்கொண்டார்”. இப்படி அவரே அந்தக் கூட்டத்தில் தெரிவித்தார்.

என்னுடைய இனிய நண்பரும் காட்பரீஸ் சாக்லேட் நிறுவனத்தில் வேலை செய்த வருமான கவிஞர் மீ‌. விசுவநாதன் அவர்களும் அந்தக் கூட்டத்திற்கு வந்திருந்தார். நானும் மீ. விஸ்வநாதன் அவர்களும் ஐஸ்கிரீமில் சாக்லேட்டைப் போட்டு நன்றாகக் கலக்கி மவுண்ட்ரோடு மாடியிலுள்ள ஒரு ஹோட்டலில் சாப்பிட்டது இன்றும் (நாவிலும் கூடத்தான்) நினைவில் நிற்கிறது.

ஐஸ்கிரீமில் இருந்து மீண்டும் தைப்பூசத்திற்கு வருகிறேன். மலேசியா சிங்கப்பூர் இலங்கை அமெரிக்கா ஆஸ்திரேலியா என்று இன்று பல வெளிநாடுகளிலும் தமிழர்களால் தைப்பூச திருவிழா பிரமாண்டமாகக் கொண்டாடப்படுகிறது.

எட்டாம் நூற்றாண்டிலேயே தைப்பூசத் திருவிழாவை தமிழர்கள் கொண்டாடி உள்ளார்கள் என்பதை அறிய முடிகிறது. ‘தைப்பூசமாடி உலகம் பொலி வெய்த’ …… என்று ஞானசம்பந்தப் பெருமான் பாடியிருப்பதைப் பார்க்கிறோம். திருவிடை மருதூரில் நான்கு நாட்கள் தைப்பூசத்தை ஒட்டி கூத்தர்களின் கூத்து நிகழ்ச்சி நடைபெற்றதாக மகாலிங்க சுவாமி கோவிலில் உள்ள சோழர் கால கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. எனவே தைப்பூச விழா என்பது தமிழர்களின் பாரம்பரிய விழா என்பதை உணர முடிகிறது.

சிவபெருமான் தனியாக நடனம் ஆடியதை மார்கழி திருவாதிரை என்கிறோம். உமாதேவியுடன் இணைந்து நடனம் ஆடிய நாள் தைப்பூச நாளாகும். சிவன் கோவில்களில் முருகன் கோவில்களில் தைப்பூச நாளில் சுவாமி புறப்பாடும் தெப்போற்சவமும் நடத்தப்படுவதுண்டு. பழனியில் தைப்பூச நாளில் தேரோட்டம் நடைபெறுவதும் குறிப்பிடத்தக்கதாகும்.

25-1-1872 அன்றுதான் (தைப்பூச நாளில்) அருட்பிரகாச வள்ளலார் ஜோதி வழிபாட்டைத் தொடங்கினார் என்று சொல்வார்கள்…..

IMG-20210129-WA0073.jpg

Leave a Reply